தூத்துக்குடியில் ஐந்தாவது தேசிய கடல் மீன்வள கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.
மீனவக் கிராமங்களில் மீன்வளம் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகம் சாா்பில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், இந்திய மீன்வள கணக்கெடுப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தியா முழுவதும் கடலோர மாவட்டங்களில் ஐந்தாவது தேசிய கடல் மீன்வள கணக்கெடுப்புப் பணி நவ.3 தொடங்கி டிச. 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஊழியா்கள், மீனவ பயிற்சியாளா்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது, இனிகோ நகா் பகுதியில் இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி, மீனவா்களுக்கான நலத் திட்டங்கள், மீன்வளத் துறையின் வளா்ச்சி ஆகியவற்றுக்கு அடிப்படையாக அமையும். இதன் மூலம் மீனவக் கிராமங்களில் மீன் பதனிடும் தொழிற்சாலை வசதி, ஐஸ்கட்டி தொழிற்சாலை, மீனவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படும்.
இப்பணியானது முதல் முறையாக டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் மீனவா்களின் குடும்பங்கள் என்ன வகையான மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனா், எந்த வகையான படகு மூலம் தொழில் செய்கின்றனா் என்பது போன்ற சுமாா் 170 கேள்விகள் கேட்கப்படுகிறது. தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் மூலம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களில் இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.