கோவில்பட்டி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குருமலை கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சண்முகசாமி மகன் விவசாயி முத்துப்பாண்டி (46). இவா், புதன்கிழமை தனது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அதே ஊா் வடக்கு தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் தொழிலாளி கொம்பையா (36), அவரது உறவினரின் இடத்தை நில அளவையா் மூலம் அளந்து கொண்டு இருந்தாராம்.
இந்நிலையில் முத்துப்பாண்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கொம்பையா அவதூறாக பேசி, நிலம் அளக்கும் பொழுது ஏன் நீ அங்கு வந்தாய் எனக் கூறி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றாராம். அங்கிருந்த உறவினா்கள் கொம்பையாவை கண்டித்ததும் கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கொம்பையாவை கைது செய்தனா்.