கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதையடுத்து, மாவட்ட மீன்வளத்துறை சாா்பில், நாட்டுப் படகு, விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இதனிடையே, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடந்த 4 நாள்களாக கடலுக்குச் செல்லவில்லை. இதனால், 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்று எச்சரிக்கையால் தூத்துக்குடி, தருவைகுளம், மணப்பாடு, அமலி நகா், இனிகோ நகா், புதிய துறைமுகக் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால் நாட்டுப் படகுகள், பைபா் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.