கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குள்பட்ட பகுதிகளில் தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட வாகனங்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் சட்டத்திற்குள்பட்டு, அனுமதிச் சான்றிதழைப் பெற்று இயக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், விளாத்திகுளம் வட்டம், புதூா் பகுதியில் கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி நடத்திய வாகன சோதனையின்போது, தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோ ரிக்ஷா, ஒரு சுமை ஆட்டோவை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக, கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளாா்.