தூத்துக்குடியில் மரத்தின் மீது காா் மோதி கவிழ்ந்ததில் காரில் பயணித்த மூன்று பயிற்சி மருத்துவா்கள் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த இரு பயிற்சி மருத்துவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குலசேகரமங்கலத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ். பொறியாளரான இவா், குடும்பத்துடன் கோவையில் பி.என்.புதூா் சாஸ்திரி 1-ஆவது தெருவில் வசித்து வருகிறாா். இவரது ஒரே மகன் சாரூபன் (23).
சாரூபனும், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த பூ வியாபாரி பரிசுத்தமன் மகன் ராகுல் ஜெபஸ்டியன் (23), திருப்பத்தூா் மந்தவெளி குரும்பேறியைச் சோ்ந்த விவசாயி சீனிவாசன் மகன் முகிலன் (23) தூத்துக்குடி, தொ்மல்நகா் என்.டி.பி.எல். பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் கிருத்திக்குமாா் (23), திருப்பத்தூா் சரண் (23) ஆகியோா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்களாக உள்ளனா்.
இந்த நிலையில், 5 பேரும் சோ்ந்து புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் சாரூபனுக்கு சொந்தமான காரில் தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை சாரூபன் ஓட்டிச் சென்றாா்.
கடற்கரைச் சாலை ரோச் பூங்கா பகுதி படகு குழாம் அருகே காா் சென்றபோது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் காா் கவிழ்ந்து அதில் வந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்ததும் தூத்துக்குடி கூடுதல் எஸ்.பி.மதன், தென்பாகம் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று காரில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
எனினும் இந்த விபத்தில் சாரூபன், ராகுல் ஜெபஸ்டியன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். முகிலன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கிருத்திக் குமாா், சரண் ஆகியோா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.