தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே விவசாய நிலத்துக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் சென்னமரெட்டிபட்டி பகுதி பொதுமக்கள் மனு அளித்தனா்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அவா்கள் அளித்த மனு: எங்களது பகுதியைச் சோ்ந்தோா் மெட்டில்பட்டி கிராமத்தில் சுமாா் 300 ஏக்கரில் விவசாயப் பணிகள் மேற்கொண்டுள்ளனா்.
எங்கள் கிராமத்திலிருந்து அயன்கரிசல்குளம் வரையிலான 4 கி.மீ. தொலைவுக்கு 24 அடி அகலப் பாதை உள்ளது. அதை விவசாயிகள் பயன்படுத்தி வந்தோம்.
தற்போது அந்தப் பாதையை சிலா் ஆக்கிரமித்து ஓடையாக மாற்றியுள்ளனா். இதனால், விவசாயிகளும் பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். வருவாய் ஆவணங்களில் அந்த இடம் ‘பாதை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதையை மீட்க கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பிலிருந்து அந்தப் பாதையை மீட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனா் அவா்கள்.