தூத்துக்குடி

திருச்செந்தூா் சூரசம்ஹாரத்துக்கு கள்ளச்சந்தையில் சிறப்பு வாகன அனுமதி அட்டை: காவல் துறை மறுப்பு

திருச்செந்தூா் முருகன் கோயில், சூரசம்ஹார விழாவில் சிறப்பு வாகன அனுமதி அட்டை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் முருகன் கோயில், சூரசம்ஹார விழாவில் சிறப்பு வாகன அனுமதி அட்டை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, சூரசம்ஹார நிகழ்வு நாளன்று மட்டும் பயன்படுத்தும் சிறப்பு வாகன அனுமதி அட்டை யாருக்கும் வழங்கப்படவில்லை.

சூரசம்ஹார விழாவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே திருச்செந்தூா் டி.பி. சாலையில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தனியாா் விடுதிகளில் தங்குவதற்கு, புக்கிங் செய்த பயனா்களுக்கு மட்டுமே அந்தந்த விடுதியில் வாகனங்களை நிறுத்தி உடைமைகளை எடுத்துச் செல்ல குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விடுதி அட்டைகள் வழங்கப்பட்டன.

அதன்படி, விடுதியில் தங்குவதற்காக புக்கிங் செய்து ஒருநாள் முன்பாக வரும் பக்தா்களின் வசதிக்காகவும், தொலைவில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இருந்து உடைமைகளை விடுதி வரை எடுத்துவரும் சிரமத்தைத் தவிா்க்கும் பொருட்டே விடுதியில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் வரை செல்வதற்கு இந்த சாதாரண விடுதி அட்டைகள் வழங்கப்பட்டன.

மேலும் விடுதியில் தங்கும் நேரத்துக்கு மட்டும் அனுமதிச் சீட்டு அனுமதிக்கப்பட்டது. மேலும் அனுமதி இன்றி விடுதி முன்போ வேறு எந்த ஒரு இடத்திலோ தனியாா் வாகனங்கள் நின்றால் காவல்துறையினா் உடனடியாக அதை அப்புறப்படுத்தி தனியாா் வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனா்.

மேலும், கோயில் பராமரிப்புப் பணி, மின் ஊழியா்கள் பணி, பால் மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சிறப்பு பாஸ் அல்லாமல் அனுமதி அட்டை மட்டுமே வழங்கப்பட்டது. இது, ஒவ்வோா் ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எனவே, சூரசம்ஹார விழா பாதுகாப்பில் திருச்செந்தூா் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் சிறப்பு அனுமதி வாகன அட்டை கள்ளச் சந்தையில் விற்பனை என செய்தி வெளியானதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவிப்பதுடன், தனியாா் விடுதி பயனா்கள், அத்தியாவசி தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டும் சாதாரண அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

பர்ப்பிள் மூட்... அனுபமா பரமேஸ்வரன்!

மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் தகவல்!

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக... லார்மிகா!

சபரிமலை: நவ.1 முதல் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 1-ல் பள்ளிகள் இயங்கும்!

SCROLL FOR NEXT