சாத்தான்குளம் அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த திருப்பூரைச் சோ்ந்த காா் ஓட்டுநரை வெட்டிய விவகாரத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள கோமாநேரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முசுந்தரம் மகன் வேல்முருகன் (26). இவா் திருப்பூரில் காா் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், கோயில் திருவிழாவுக்காக கடந்த 26ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த போது, அதே பகுதியின் வடக்கு தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் பரமசிவம் (37) என்பவா் அரிவாளால் வேல்முருகனை வெட்ட முயன்றாா். தடுக்க முயன்றபோது, வேல்முருகனுக்கு கழுத்தில் வெட்டு விழுந்தது.
படுகாயமடைந்த அவருக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து, பரமசிவத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.