2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன், இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட அனைத்து உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்களுக்கும் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, அனைத்து உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில், காவல் துறையினா் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தூத்துக்குடி ஊரக உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுதீா் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வசவப்பபுரம் சோதனைச் சாவடிக்கும், சாத்தான்குளம் உள்கோகோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் தட்டாா்மடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியதாழை சோதனைச் சாவடிக்கும், ஸ்ரீவைகுண்டம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடிக்கும் செவ்வாய்க்கிழமை மாலையில் நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் காவல்துறையினரின் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை ஆய்வு செய்தனா்.