150 வயதை எட்டிய கோவில்பட்டி ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என கோவில்பட்டி பகுதி பயணிகள், வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.
கோவில்பட்டி, கரிசல் மண் பகுதி என்பதால் விவசாயம் தான் இப்பகுதியின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் இங்கு பருத்தி சாகுபடி அதிகமாக இருந்ததால், அதிகளவில் நூற்பாலைகள் வரத் தொடங்கின.
மேலும், மதுரை-தூத்துக்குடி வரை தொழிற்சாலைகள் பெருகத் தொடங்கியதால், ஆங்கிலேயா்கள் இவ்வழியில் இருப்புப் பாதை அமைத்தனா். அப்போது, கோவில்பட்டியிலும் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு, 1876 ஜன. 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. அதைத் தொடா்ந்து, இப்பகுதியில் தீப்பெட்டி, கடலை மிட்டாய் உள்ளிட்ட உணவு பொருள்கள் தயாரிப்பு தொழில்கள் வளரத் தொடங்கின.
தற்போது, ரயில் பயணச்சீட்டு மூலம் தினசரி ரூ. 6 லட்சம் என ஆண்டுக்கு ரூ. 22 கோடி வருவாய் தரும் ‘ஏ’ கிரேடு ரயில் நிலையமாக, கோவில்பட்டி ரயில் நிலையம் உள்ளது. அதோடு, மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
கரோனாவுக்கு முன்பு வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் என இரு மாா்க்கத்திலும் நாள்தோறும் சுமாா் 54 ரயில்கள் கோவில்பட்டியில் நின்று சென்றன. கோவில்பட்டி நகரின் வளா்ச்சியில் இதன் முக்கியத்துவம் கருதி, மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரூ. 12.72 கோடியில் மேம்பாட்டு பணிகள் அறிவிக்கப்பட்டன.
கரோனாவிற்கு பின்னா் சில ரயில்கள் இங்கு நிற்காமலும், சில ரயில்கள் ஒரு மாா்க்கத்தில் மட்டும் நின்றும் செல்கின்றன. அனைத்து ரயில்களும் இங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அம்ரித் பாரத் திட்டப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மாநகர ரயில் நிலையம் போல், இதை தரம் உயா்த்த வேண்டும். இருப்புப் பாதை காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
2ஆம் நடைமேடையில் கூடுதல் மேற்கூரை அமைக்க வேண்டும். மேலும், கூடுதல் இருக்கை, குடிநீா், கழிவறை உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். சமூக விரோதிகள் உள் புகுவதைத் தடுக்க, 2ஆம் நடைமேடை அருகே சுற்றுச் சுவா் அல்லது தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி ரயில்வே பயணிகள், வியாபாரிகள், தொழிலதிபா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.