திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், சிவன் கோயில் ஆகியவற்றில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இதையொட்டி, சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, திருப்பள்ளியெழுச்சி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மாணிக்கவாசகா், நடராஜா் சப்பரங்களில் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வந்தனா். மாலையில் பாா்வதி அம்மன் ஊஞ்சல் உற்சவம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. இதில், பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
இதேபோல, இந்தக் கோயிலுடன் இணைந்த ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் என்ற சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், சுவாமி-அம்மனுக்கு அபிஷேகம், நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கோ பூஜை, தாண்டவ தீபாராதனை, திருப்பள்ளியெழுச்சி, உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் சாயரட்சை தீபாராதனை, ராக்கால அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ராமு, பணியாளா்கள் செய்திருந்தனா்.