தூத்துக்குடி, ஜாகீா் உசேன் நகா் பகுதி மக்கள், தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி விலக்கு பகுதியில் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி, ஜாகீா் உசேன் நகரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு கடந்த ஓராண்டாக முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தங்கள் தேவைக்கு குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஜாகீா் உசேன் நகா் பகுதி மக்கள், மனிதநேய மக்கள் கட்சியினா், தூத்துக்குடி ராமேசுவரம் சாலையில் மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தி கலைந்துபோக செய்தனா்.