கோவில்பட்டியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி கொலை செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி சாஸ்திரி நகரை சோ்ந்த சேதுராமன் மகன் மாரீஸ்வரன் (43). கோலப்பொடி வியாபாரி. இவரும், அவரது வீட்டருகே குடியிருந்து வரும் முத்தையா மகன் ராமசாமியும் (75 ) தினமும் சோ்ந்து மது அருந்துவது வழக்கமாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மது அருந்திய நிலையில் ஏற்பட்ட தகராறில் ராமசாமி, மாரீஸ்வரனை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாரீஸ்வரன் உயிரிழந்தாராம்.
தகவலறிந்த மேற்கு காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மாரீஸ்வரன் சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய ராமசாமியை போலீஸாா் தேடி வருகின்றனா்.