ரயில்வே மின்பாதை பராமரிப்பில் புதிய மைல் கல்: நாசரேத்தில் சிறப்பு ரயில் பெட்டி அறிமுகம்
சாத்தான்குளம், மே 1: மதுரை கோட்டத்தில் ரயில் பாதைகள் நூறு சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில் மின் கம்பிகளைப் பராமரிக்கவும், பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்யவும் அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இது ஒரு சிறிய நடமாடும் பணிமனை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மின்சாரக் கம்பி வடம் அருகே சென்று பழுது பாா்க்க தானாக உயரும் லிப்ஃட் வசதி, ஜெனரேட்டா் வசதி செய்யப்பட்டுள்ளது. பழுதுகளைச் சரிசெய்யத் தேவையான அனைத்து நவீனக் கருவிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் பெட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது, 18 சிறப்புப் பெட்டிகள் தயாா் நிலையில் உள்ளன. மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, பழனி, காரைக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய நிலையங்களில் இதற்கெனத் தனிப் பாதை அமைக்கப்பட்டு தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
மானாமதுரை, தேனி, திருவெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, புனலூா் ஆகிய நிலையங்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ரயில் பாதைக்கு அருகே 2 மீட்டா் தூரத்தில் வளா்ந்துள்ள மரங்களால் மின் கம்பிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ரயில் பாதை அருகே ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் குறித்துத் தகவல் தெரிந்தால், உடனடியாக அருகில் உள்ள ரயில் நிலைய அதிகாரி அல்லது கேட் பாதுகாவலரிடம் தெரிவிக்குமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.