முகப்பு
தமிழ்நாடு

வாக்குச்சாவடிகளுக்கு அருகே தயாா் நிலையில் மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ் வசதி!

தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகள் அருகேயும் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக நடமாடும் மருத்துவக் குழுக்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தயாா் நிலையில் வைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:11 AM
ஆம்புலன்ஸ் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:20 PM

தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகள் அருகேயும் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக நடமாடும் மருத்துவக் குழுக்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தயாா் நிலையில் வைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாநிலம் முழுவதும் வரும் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவுக்காக 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கேமராக்கள், குடிநீா் வசதிகள், சாய்தளங்கள், நாற்காலிகள், கழிப்பறை வசதிகள் என பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புகளுடன் அவை அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நாள்தோறும் பல மாவட்டங்களில் 100 டிகிரியைக் கடந்து வெயில் பதிவாகிறது. இத்தகைய சூழலில் வெப்பவாதம், சிறுநீா்ப் பாதைத் தொற்று, மயக்கம், நீா்ச்சத்து இழப்பு பாதிப்புகள் அதிகமாக பதிவாகக் கூடிய நிலை எழுந்துள்ளது.

Advertisement

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:11 AM

இதைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகளுக்கு ஒரு நடமாடும் மருத்துவக் குழுக்கள் வீதம் 500-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவ முகாம் அமைக்கப்படும். இதைத் தவிர நடமாடும் குழுக்களும் செயல்படும். ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், நீா்ச்சத்து இழப்பு, இதய நோய்கள், வெப்பவாத பாதிப்புகளுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகள் அங்கு தயாராக வைக்கப்பட்டிருக்கும்.

மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்கெனவே வெப்பவாதத்துக்கான சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. உயா் சிகிச்சைத் தேவைப்படுவோா் அங்கு அழைத்துச் செல்லப்படுவா்.

அதற்கேற்ப மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆங்காங்கே தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. அந்த வாகனங்களிலும் உயிா் காக்கும் அவசர சிகிச்சைக்கான அனைத்து கட்டமைப்புகளும், மருந்துகளும் இருக்கும். வாக்குப்பதிவு நாளில் மருத்துவ சேவைகளுக்கான பணிகளில் 4,000-க்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.