முகப்பு
திருச்சி

சம்பிரதாயமாக நடந்து முடிந்த கிராமசபைக் கூட்டங்கள்

கரூர், ஆக.15: கரூரில் கிராம சபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயமாக நடந்து முடிந்தன. இந்திய அரசியலமைப்பு சட்டமுறையில் கிராம ஊராட்சி மன்றங்களின் அமைப்பு மிகவும் முக்கியம். அந்தந்தப் பகுதி மக்களின

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:07 PM
பகிர்:

கரூர், ஆக.15: கரூரில் கிராம சபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயமாக நடந்து முடிந்தன.

இந்திய அரசியலமைப்பு சட்டமுறையில் கிராம ஊராட்சி மன்றங்களின் அமைப்பு மிகவும் முக்கியம். அந்தந்தப் பகுதி மக்களின் குறைகளை அவர்களே தீர்த்துக் கொள்வதற்காக ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்டவைதான் ஊராட்சி மன்றங்கள்.

பொதுமக்கள் தங்களின் குறைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமும், அரசின் பிரதிநிதிகளிடம் நேரடியாகத் தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக ஊராட்சி மன்றங்களின் மூலமாக இந்தக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜயந்தி ஆகிய நாள்களில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், அரசின் உத்தரவின் பேரில், சிறப்புக் கூட்டங்களும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும்.

இவ்வாறான கூட்டங்களில் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், ஊர்ப் பிரமுகர்கள் பங்கேற்று ஊராட்சியின் தேவை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளையும், தீர்மானங்களையும் கண்காணிக்க, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து ஓர் அலுவலர் பார்வையாளராகப் பங்கேற்று, தீர்மானங்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்திலுள்ள 158 கிராம ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டுமென ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவில், வேலை உறுதித் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை முறையாகப் பராமரித்தல், ஊரக விளையாட்டுப் போட்டிகள், ஊரக நூலகப் போட்டிகள் நடத்துதல், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், குடிசைகள் இல்லாத காங்கிரீட் வீடு கட்டும் திட்டம், சமூகத் தணிக்கை செய்தல், கிராம ஊராட்சியின் பொது நிதி செலவினம் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான பொருள்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவும் பத்திரிகைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு மிகவும் தாமதமாகவே போய்ச் சேர்ந்தன.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டங்கள் சம்பிரதாய முறைக்காக நடைபெற்றதைப் போல நடந்தேறின.

பெரும்பாலான கூட்டங்களில் பொதுமக்கள் பெயரளவிற்கே பங்கேற்றதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுவோர், சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.

நடைபெற்ற கூட்டங்களிலும் ஆட்சியரால் வலியுறுத்தப்பட்ட பொருள்களை முன் வைத்தே விவாதம் நடைபெற்றதோடு, அதுதொடர்பான தீர்மானங்களே நிறைவேற்றப் பட்டுள்ளன.

குறிப்பாக, கரூர் மாவட்டம் நன்செய்புகழூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பார்வையாளராக ஆட்சியர் பங்கேற்றார். இதில், பொதுமக்கள் தங்களின் குறைகள் தொடர்பாக எதுவும் பேசவில்லை. இதனால் ஆட்சியரும் சுதந்திர தினத்தின் சிறப்பு, பெண்களின் சிறப்பு குறித்து மட்டுமே பேசிமுடித்தார்.

ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாகத் தெரிவித்தனர். இதில், தனிநபர் பிரச்னைகளும், சில பொதுப் பிரச்னைகளும் அடங்கியிருந்தன. எனினும், அந்தப் பொதுப் பிரச்னையை கூட யாரும் விவாதித்து தீர்மானமாகக் கொண்டு வர முயற்சி செய்யவில்லை.

ஆட்சியரிடமிருந்து வரப்பெற்ற கடிதத்தில் உள்ள பொருள்களை மட்டுமே தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என அரசு அலுவலர்கள் தெரிவித்துவிட்டதால், மற்ற பிரச்னைகள் குறித்துப் பேசவில்லை. கிராம சபைக் கூட்டங்களில் மற்ற பிரச்னைகள் குறித்து எப்படிப் பேச முடியும் என்றார் அந்த ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா கந்தசாமி.

இவ்வாறு கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்களின் பொது பிரச்னைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாமா என்று ஊராட்சிமன்றத் தலைவருக்கே சந்தேகம் ஏற்படும் வகையில்தான் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

ஆட்சியர் வருகிறார், நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார் என்பதால் நன்செய்புகழூரில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவ-மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்க வைக்கப்பட்டனர். மற்ற பகுதிகளில் கூட்டம் கூடிய சில நிமிஷங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கூட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற, கூட்டங்களால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. எனவே, கிராம சபைக் கூட்டங்கள் ஏன் கூட்டப்படுகின்றன? இதில் ஊராட்சிமன்றத் தலைவரின் பங்கு என்ன, பொதுமக்கள் இதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

இந்த விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே, கிராம சபைக் கூட்டங்களின் உண்மையான முழுப்பயனும் பாமர மக்களைச் சென்றடையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →