முகப்பு
திருச்சி

பெருமாள் மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா?

துறையூர், ஆக. 18: திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமாள் மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் விரும்புகின்றனர்.     துறையூர் ஒன்றியம்,

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:09 PM
பகிர்:

துறையூர், ஆக. 18: திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமாள் மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

    துறையூர் ஒன்றியம், சொரத்தூர் ஊராட்சிக்குள்பட்டது பெருமாள் மலை. இந்த மலையின் மீது அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது.

கரிகால் சோழன் பேரனால் கட்டப்பட்டதாக இந்தக் கோயிலின் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   மன்னரின் கனவில் திருப்பதி வெங்கடாஜலபதி தோன்றி, தனக்கு இந்த மலையில் கோயில் கட்டுமாறு கூறியதாகவும், அதனால், கரிகால் சோழனின் பேரனால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது என்றார் கோயிலின் தற்போதைய அர்ச்சகர்.

   மலை மீது உள்ள கோயிலைச் சென்றடைய அடிவாரத்தில் இருந்தே சாலை வசதி உள்ளது.

இலகுரக வாகனங்கள் மட்டுமே சென்று வரும் இந்தச் சாலையும் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. மேலும், அடிவாரத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல 1,526 படிக்கட்டுகளும் உள்ளன. இவையும் ஆங்காங்கே சேதமடைந்து கவனிப்பாரின்றி உள்ளன.

   இந்தக் கோயிலுக்குள் திருமாலின் பத்து அவதாரங்கள், 10 தூண்களில் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. மேலும், இசைத் தூண் ஒன்றும் உள்ளது.

வைணவத் தலமான இங்கு கருப்பண்ணர் வழிபாடு செய்யப்படுவதால், பக்தர்களுக்கு விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

   கோயிலின் அடிவாரத்தில் தல மலையை நோக்கி நின்றபடி வணங்கிய நிலையில் கருடரின் பிரம்மாண்ட சிலையும், இந்த மலை மீதுள்ள பெருமாளை நோக்கி வணங்கிய நிலையில், பெரிய பஞ்சமுக சிலையும் இயற்கையான சூழ்நிலையில் திறந்த நிலையில் தனியார் அமைத்துள்ளனர்.

   ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் கிரிவலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதேபோல, ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்தப் பகுதியில் உள்ளவர்கள், இங்கிருந்து பிழைப்புக்காக வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்குச் சென்றவர்கள் திரளாக கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபடுகின்றனர்.

   52 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மே 27-ல் இந்தக் கோயிலில் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஏற்கெனவே இந்து அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இந்தக் கோயில் இருந்தாலும், பக்தர்கள் வருகைக்கு ஏற்றவாறு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.

   எனவே, கோயில் நிர்வாகம் சார்பில் அடிவாரத்திலிருந்து மலைக் கோயிலுக்குச் செல்வதற்கு பேருந்துகளை இயக்க வேண்டும்.

தமிழக அரசு இந்தப் பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவித்து, அதற்குரிய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் விருப்பமாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →