விவசாயிகள் குறைதீர் கூட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
கரூர், டிச. 30: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலில் தற்
கரூர், டிச. 30: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலில் தற்போதும் முதலிடம் வகிப்பது வேளாண் தொழில்தான். மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, கம்பு, சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்றவை பயிரிடப்படுகின்றன.
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளின் குறைகளைத் தீர்த்துவைத்து, விவசாயத்தை முன்னேற்ற அரசு தீவிரப் பங்காற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் விவசாயிகளுக்காக குறை தீர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மாதந்தோறும் நடைபெறும் இக் கூட்டங்கள் கரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் விவசாயிகளை நேரடியாகச் சந்திக்கும் வகையில் நடைபெறுகின்றன.
ஜனவரியில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு டிசம்பரிலேயே மனுக்கள் பெறப்படும். மேலும், குறிப்பிட்ட நாளுக்குள் மனு அளிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படும். பெறப்படும் மனுக்களுக்கு உரிய அலுவலர்களிடமிருந்து பதில் பெற்ற பின்னர், குறிப்பிட்ட நாளில் கூட்டம் நடத்தப்படும்.
அவ்வாறு கூட்டம் நடத்தப்படும் நாளானது கேள்விகள் கேட்கப்பட்ட விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தப்படும். இவ்வாறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடைபெறும் கூட்டங்கள், விவசாயிகளின் போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்றே கூறலாம். இதற்கு விவசாயிகளிடம் போதுமான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தாதே காரணமாகும்.
டிசம்பர் மாத விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனுக்கள் அனுப்பியிருந்த விவசாயிகளின் 26 கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
இதில், துரதிருஷ்டவசமாக 18 கேள்விகள் பொது பிரச்னை, தனிப்பட்ட பிரச்னை சார்ந்தவை. மீதமுள்ள 8 கேள்விகள் மட்டுமே விவசாயம் சார்ந்த கேள்விகள். இதில், முந்தைய கூட்டங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு, திருப்தியான பதில்கள் கிடைக்கப் பெறாமல் மறுபடியும் கேட்கப்பட்ட கேள்விகளே அதிகம்.
மேலும், இக் கேள்விகளைக் கேட்டவர்களில் கவண்டம்பட்டி ஆர். சுப்பிரமணியம், நாம் இயக்க கரூர் மாவட்டச் செயலர் ஆர். செல்வராஜ் ஆகியோர் தலா இரு கேள்விகளைக் கேட்டுள்ளனர்.
இதேபோல, மாதந்தோறும் நடைபெறும் கூட்டங்களிலும் உழவர் ஆய்வு மன்றத் தலைவர் குளித்தலை ஏ.வி. கோபாலகிருஷ்ணன், காவிரிப் பாசன விவசாயிகள் சங்கத் செயல் தலைவர் மகாதானபுரம் வி. ராஜாராம், துணைச் செயலர் கவண்டம்பட்டி ஆர். சுப்பிரமணியம், முன்னோடி விவசாயி எம். ராஜேஸ்வரி, நாம் இயக்க மாவட்டச் செயலர் ஈசநத்தம் ஆர். செல்வராஜ் உள்ளிட்ட சில விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். புதிதாக எந்த விவசாயிகளும் பங்கேற்பதில்லை.
இதுகுறித்து சில விவசாயிகள் கூறியது:
அனுப்பப்படும் மனுக்களுக்கு உறுதியான பதில்களை அலுவலர்கள் அனுப்புவதில்லை. இதுகுறித்து கேட்டால் நிதி ஒதுக்கப்படும், பரிசீலனையில் உள்ளது என்ற பதில்களே வருகின்றன. எந்த வேலையும் நடைபெறாததால் இது போன்ற கூட்டங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்றனர் அவர்கள்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு அலுவலர்கள் உறுதியான பதில்களைத் தெரிவிப்பதோடு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்தப் பணிகளை முடித்துக் கொடுக்கும் போதுதான், இதுபோன்ற குறைதீர் கூட்டங்களின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.
அதேநேரத்தில், விவசாயிகளும் பணிகள் நடைபெறவில்லை என்பதற்காக கூட்டங்களைப் புறக்கணிக்கும் நிலையில், தங்களின் விவாதங்களையோ, நியாயமான கருத்துகளையோ தெரியப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டு விடும்.
எனவே, விவசாய சங்கங்கள் தங்களின் கோரிக்கைகளை அரசுக்குத் தெரியப்படுத்தி, அவற்றை இதுபோன்ற கூட்டங்களில் விவாதம் நடத்தி நிறைவேற்றிக் கொள்ள முன்வர வேண்டும். மற்ற பகுதிகளிலுள்ள விவசாயிகளிடமும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை வலியுறுத்த வேண்டும்.
அதிகமான விவசாயிகள் பங்கேற்று, அந்தந்தப் பகுதிகளிலுள்ள குறைகளைக் கூறும்போதுதான் உண்மையான நிலவரம் தெரிவதோடு, பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும்.
இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரசின் பங்கும் முழுமையாக உள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிக்கலில் மாட்டிவிடக் கூடாது என்று கருதி, மாவட்ட நிர்வாகம் இதிலிருந்து தப்பிக்கும் வழிகளைக் கையாளக் கூடாது.