துறையூர் அருகே குடிநீரின்றி தவிக்கும் கிராம மக்கள்
துறையூர், ஜூன் 29: துறையூர் ஒன்றியம், காளிப்பட்டியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக தங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் வசதி செய
துறையூர், ஜூன் 29: துறையூர் ஒன்றியம், காளிப்பட்டியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக தங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியத்தில் காளிப்பட்டி, தெற்கியூர், சிங்களாந்தபுரம், துறையூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, தீரன்நகர், சர் பிடி தியாகராயர்நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது சிங்களாந்தபுரம் ஊராட்சி.
இந்த ஊராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு இருந்தாலும், காளிப்பட்டி கிராம மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் குடிநீருக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
காளிப்பட்டியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தக் கிராமம் முத்தமிழ்நகர், ஜீவாநகர் என்ற விரிவாக்கப் பகுதிகளை உள்ளடக்கியது.
1997 ஆம் ஆண்டு குடிநீர் பிரச்னைக்காக விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தலைமையில் இந்தக் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, சுமார் 25,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், இந்தத் தொட்டியில் குடிநீர் நிரப்புவதற்கு நீராதாரம் இல்லாத நிலையில், தற்போது ஒரு கி.மீ. தொலைவில் உள்ள ஏரியில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர்த் தொட்டியில் நீர் நிரப்பப்படுகிறது.
எனினும், இந்த ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்தும் நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடிவதில்லை. இதனால், கிராம மக்களுக்கு சிறிது நேரம்கூட தண்ணீர் விநியோகிக்க முடிவதில்லை.
இந்நிலையில், தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் போது பொதுமக்கள் பிடிக்கும் வகையில் குழாய் அமைக்கப்பட்டது. இருந்தும், அதனால் எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை என்றார் குடிநீர் பிரச்னைக்கான போராட்டத்தை வழிநடத்தும் பி. கணேசன்.
ஓராண்டிற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் த. சவுண்டையா துறையூர் பகுதியில் ஆய்வுக்கு வந்துள்ளதை அறிந்த இப்பகுதி மக்கள், துறையூரில் ஆட்சியரை மறித்து தங்கள் கோரிக்கையை தெரிவித்தனர். இதையடுத்து, அவரும் இந்த நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாராம். ஆனால், அதனாலும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
இந்தப் பகுதியில் ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக ஜீவாநகர், முத்தமிழ் நகர் பகுதியில் ஆழ்குழாய்க் கிணறும், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டன. இதில் ஜீவா நகரில் மட்டும் தட்டுப்பாட்டுடன் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப் பகுதி மக்கள் பகளவாடி கிராம மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாயிலிருந்து நீரேற்றும் போது அங்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
குடிநீர் பிரச்னை குறித்து முத்தமிழ் நகர் மக்கள் கூறியது:
இங்கு 300 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப்பட்டிருந்தும், சுமார் 100 அடி ஆழத்திற்குத்தான் குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், தொட்டியில் போதுமான தண்ணீரை நிரப்ப முடியவில்லை. மக்களுக்குத் தேவையான குடிநீரையும் விநியோகிக்க முடியவில்லை.
ஆழ்குழாய் ஆழத்திற்கு ஏற்ப குழாயும், அதற்கேற்ற மின் மோட்டாரும் பொருத்தினால் ஓரளவு தண்ணீர் பிரச்னை குறையும். தற்போது இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லாததால், அம்மாப்பட்டி கிராமத்திற்குச் சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம் என்றனர் அவர்கள்.
2009, ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் பகுதி மக்கள் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆயத்தமான போது, துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானப் பேச்சு நடைபெற்றது. ஆனாலும், குடிநீர் பிரச்னை தீரவில்லை என்கின்றனர் தற்போது குடிநீர் பிரச்னைக்காக போராடி வரும் தமிழ்நாடு தனியார் மோட்டார் வாகன சங்கத்தினர்.
மேலும், தங்களுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில், 2 கி.மீ. தொலைவில் உள்ள அம்மாப்பட்டி கிராமத்திற்கு வரும் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் பகுதி வரை நீட்டிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.