கரூரில் கொசுத் தொல்லை: கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
கரூர், செப். 22: கரூர் பகுதியில் பெருகி வரும் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர், இனாம்கரூர், தாந்தோன்றிமலை
கரூர், செப். 22: கரூர் பகுதியில் பெருகி வரும் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர், இனாம்கரூர், தாந்தோன்றிமலையில் வசித்து வருபவர்கள் கொசுத் தொல்லையால் இரவு தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். கொசு விரட்டிகளை பயன்படுத்தினாலும் கொசுவின் தொல்லையிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. இந்தக் கொசுக்களினால் பல்வேறு தொற்றுநோய்களும் பரவி வருகின்றன. கரூரில் பலர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் நகரப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் இரட்டை வாய்க்கால் பணியினால்தான் அதிக அளவில் கொசு உற்பத்தியாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரட்டை வாய்க்கால் பணிக்காக ஆங்காங்கே வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தப்படுவதால் தண்ணீர் தேங்குகிறது. இதனால், அந்தத் தண்ணீரில் கொசுவின் உற்பத்தி அதிகமாக உள்ளது.
இவ்வாறு உற்பத்தியாகும் பல்வேறு வகை கொசுக்களால் பாதிக்கப்படும் மக்களைக் காக்க கரூர், இனாம்கரூர், தாந்தோன்றிமலை உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசுக்களை ஒழிக்க எடுத்து வரும் நடவடிக்கை குறித்து கரூர் நகராட்சி நகர் நல அலுவலர் கே. சந்தோஷ்குமார் கூறியது:
கரூர் நகராட்சிப் பகுதியில் கொசுவை ஒழிப்பதற்கு 3 முறைகளை கையாண்டு வருகிறோம். வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அபேட் மருந்துகளை தண்ணீர் தொட்டிகளிலும், குடிநீருக்காக சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களிலும் ஊற்றி வருகிறோம். அதே போல் கழிவுநீர் கால்வாய்களை பராமரிப்பது, அவற்றிலுள்ள கொசுக்களை அழிப்பதற்கு தெளிப்பான் மூலமாக மருந்து தெளித்து வருகிறோம். கொசு உற்பத்தி நாளான 7 நாளை கணக்கிட்டு 6 நாளுக்கு ஒரு முறை ஒவ்வொரு வார்டுகளிலும் இந்த மருந்தை தெளித்து வருகிறோம்.
அடுத்ததாக பைரத்ரம் என்ற கொசு மருந்தினை புகை மூலமாக 18 நாள்களுக்கு ஒரு முறை வார்டுகளில் அடித்து வருகிறோம். இதற்குத் தேவையான கொசு மருந்துகள், சாதனங்கள் நகராட்சியில் கைவசம் உள்ளது. எனினும், உற்பத்தியாகும் கொசுக்களை முற்றிலுமாக அழிப்பது என்பது முடியாத காரியம்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதோடு, பிளாஸ்டிக் பைகள், வீட்டுக் குப்பைகளை கழிவுநீர் கால்வாயில் கொட்டாமல் இருக்க வேண்டும். வீட்டிலுள்ள தேவையற்ற பொருள்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
மேலும், கொசு ஒழிப்புக்காக மத்திய, மாநில அரசுகள் தனியாக நிதி ஏதும் ஒதுக்குவதில்லை என்றார் அவர்.