அரசுக் கல்லூரி முன் முற்றுகையிடும் தனியார் கல்வி நிறுவனங்கள்
கரூர், ஜுன் 14: கரூர் அரசு கலைக் கல்லூரி முன் தனியார் கல்வி நிறுவனங்கள் முற்றுகையிட்டு மாணவர்களைப் பிடிப்பதில் போட்டியிட்டு வருகின்றன. சிறிய மாவட்டமான கரூர் மாவட்டம் கல்வியிலும் தற்போது தனது முத்திரை
கரூர், ஜுன் 14: கரூர் அரசு கலைக் கல்லூரி முன் தனியார் கல்வி நிறுவனங்கள் முற்றுகையிட்டு மாணவர்களைப் பிடிப்பதில் போட்டியிட்டு வருகின்றன.
சிறிய மாவட்டமான கரூர் மாவட்டம் கல்வியிலும் தற்போது தனது முத்திரையைப் பதித்து வருகிறது. பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சிறந்த மதிப்பெண்களை பெற்று அனைவரது கவனத்தையும் கரூர் ஈர்த்துள்ளது.
நிகழாண்டில் மாவட்டத்திலுள்ள 100 பள்ளிகளிலிருந்து சுமார் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தங்களின் உயர் கல்வியைக் கற்பதில் ஆர்வம் கொண்டு வருவதால், உயர் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பதில் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக, மருத்துவம், பொறியியல், கணினி சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து சேர்ந்து வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதில் மாணவர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்.
கரூர் மாவட்ட மாணவர்களின் கலை அறிவியல் படிப்பிற்கு அரசு சார்பில் தாந்தோன்றிமலையில் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), குளித்தலையில் கலைஞரின் பொன் விழா நினைவு கலைக் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. இவைதவிர சுமார் 6-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில், பாரம்பரியமாக நடைபெற்று வரும் சில கல்லூரிகளைத் தவிர மற்றவை தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டவை. அத்தகைய கல்லூரிகள் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் தங்களது கல்வி நிறுவனங்களைப் பிரபலப்படுத்த கரூர் அரசு கலைக் கல்லூரியை நம்பியுள்ள நிலைக்குச் சென்றுள்ளன.
பள்ளிப் படிப்பை தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க நினைக்கும் மாணவர்கள் உயர் கல்வியை அரசு நிறுவனங்களில் படிக்கவே விரும்புவதால், அரசுக் கல்லூரிகளில் சேர்க்கை முடிந்து விடுகிறது. அதன் பின்னர் இடம் கிடைக்காமல் கல்லூரியை விட்டு வெளியேறும் மாணவ,மாணவிகளை இந்தத் தனியார் கல்லூரிகள் குறிவைக்கின்றன.
இதற்காக தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் தாந்தோன்றிமலை அரசுக் கல்லூரி முன் தனியார் கல்லூரிகள் டிஜிட்டல் பதாகைகளை அமைத்தும், சிறிய அளவிலான மாணவர் சேர்க்கை மையங்களைத் தொடங்கியும் மாணவ,மாணவிகளைச் சேர்த்து வருகின்றன.
தனியார் கல்லூரிகளின் இந்தச் செயலுக்கு அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், தனியார் கல்லூரிகளை நடத்துவோரின் செல்வாக்கால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால், சில கல்லூரிகள், அரசுக் கல்லூரி வளாகத்திற்குள் சென்று விளம்பரத் துண்டறிக்கைகளை வழங்கியும் வருகின்றன. இவ்வாறான செயல்களை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.