முகப்பு
திருச்சி

திருச்சி துணை மேயர்: அதிமுகவில் பரபரப்பு

திருச்சி, அக். 23: திருச்சி மாநகராட்சித் தேர்தல் முடிந்து, வெற்றி பெற்றவர்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில், மாமன்றத்தின் இன்னொரு பிரதானமான பதவியாகிய துணை மேயர் பொறுப்புக்கான பேச்சு அதிமுகவி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:33 AM
பகிர்:
Updated On : 29 டிசம்பர், 2023 at 12:24 AM

திருச்சி, அக். 23: திருச்சி மாநகராட்சித் தேர்தல் முடிந்து, வெற்றி பெற்றவர்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில், மாமன்றத்தின் இன்னொரு பிரதானமான பதவியாகிய துணை மேயர் பொறுப்புக்கான பேச்சு அதிமுகவில் இப்போதே பரபரப்பாகியிருக்கிறது.

திருச்சி மாநகராட்சியின் நான்காவது மாமன்றத்தின் புதிய மேயர், உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு பொறுப்பேற்கின்றனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 3 மாமன்றங்களின் மேயர் பதவிகளை காங்கிரஸ் கட்சியே கைப்பற்றி வந்தது.

தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த அ. ஜெயா மேயர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ளார். இத்துடன் 65 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாமன்றத்தில் 42 இடங்களை அதிமுக வென்றுள்ளது.

Advertisement

கடந்த மாமன்றத்தில் 27 இடங்களைப் பெற்றிருந்த திமுக, தற்போது 16 இடங்களைத்தான் கைப்பற்றியுள்ளது.

பேரம் பேச வழியில்லாமல் சுயேச்சை உறுப்பினர்கள் இருவர், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் மட்டுமே உள்ளனர். மதிமுகவும் 3 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

எனவே, அதிமுகதான் துணை மேயர் பதவியையும் கைப்பற்றப் போகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில், தற்போது வெற்றி பெற்றுள்ள 42 அதிமுக உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே ஏற்கெனவே மாமன்ற உறுப்பினராக இருந்தவர்கள்.

மேயர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் அனுபவமில்லாதவர் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை சமாளிக்கும் வகையில், அதிமுக தலைமை அனுபவமுள்ளவரைத் துணை மேயராக்கும் என்ற பேச்சும் இருக்கிறது.

இதன்படி பார்த்தால், கடந்த மாமன்றத்தில் மாமன்றக் கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்த ஜெ. சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இவர், தற்போது அதிமுகவில் ஜெயலலிதா பேரவை மாநகர் மாவட்டச் செயலராக உள்ளார். மாமன்றத்தில் இவர்தான் அதிமுகவினரில் மூத்தவர். மூன்றாவது முறை தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

இந்த முதல் வரிசைப் போட்டிப் பட்டியலில் ஏ.பி. கிருஷ்ணமூர்த்தியும், ரா. வனிதாவும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கடந்த மாமன்றத்தில் உறுப்பினராகப் பதவி வகித்தவர்கள்.

அதிமுகவைப் பொருத்தவரை அனுபவம் போன்ற விஷயங்களில் அத்தனை கவனம் செலுத்தாது என்ற கருத்து இந்த முறையும் நிரூபிக்கப்படுமானால், ஒரு புதிய முகம் துணை மேயராக்கப்படலாம்.

அமைச்சர் என். மரியம்பிச்சையின் மரணத்துக்குப் பிறகு திருச்சி மேற்குத் தொகுதியில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்காமல் ஜெயலலிதா விட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டை திமுக தேர்தல் களத்தில் முன்வைத்தது.

ஒருவேளை, இந்தக் குறையைப் போக்க வேண்டும் என்ற முடிவை அந்தக் கட்சியின் தலைமை எடுக்குமானால், மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீரா பெயர் துணை மேயர் பொறுப்புக்கு அறிவிக்கப்படலாம். இவற்றையும் தாண்டி, புதிய பெயர் அறிவிக்கப்படுவதற்கும் அதிமுகவில் வாய்ப்புகள் உள்ளன.

பலரும் தலைமைக்கு நெருக்கமானவர்களைத் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கிவிட்டனர். பதவியேற்பு முடிந்த பிறகு அக். 29-ம் தேதிதான் துணை மேயரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே, அக். 27-ம் தேதி துணை மேயர் பதவிக்கான வேட்பாளர் பெயரை அதிமுக தலைமை அறிவிக்கும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் நாள் 26-ம் தேதி யார் சென்னைக்குப் புறப்படுகிறார்கள்? என்று பார்த்தால் வினாத்தாள் மட்டுமல்ல, விடைத்தாளும் வெளியாகிவிடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.