முகப்பு
திருச்சி

வீட்டு உரிமையாளர்கள் நிபந்தனை: குடியிருப்போர் அவதி

கரூர், பிப். 28: இறந்தவரின் உடலை வீட்டிற்குள் கொண்டு வர, வீட்டு உரிமையாளர்கள் தடை போடுவதால், வாடகைக்கு குடியிருப்போர் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜவுளி, லாரி, பேருந்துக் கூடு கட்டும் தொழில் போன்றவ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:53 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:52 PM

கரூர், பிப். 28: இறந்தவரின் உடலை வீட்டிற்குள் கொண்டு வர, வீட்டு உரிமையாளர்கள் தடை போடுவதால், வாடகைக்கு குடியிருப்போர் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜவுளி, லாரி, பேருந்துக் கூடு கட்டும் தொழில் போன்றவற்றால் பெரிய தொழில் நகரமாக கரூர் மாறிவிட்டது.

இத்தகைய தொழில் வளர்ச்சியால் வெளி மாவட்டங்களில் இருந்து, குடும்பத்தோடு வேலைக்காக கரூருக்கு வரும் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக நகரின் குடியிருப்புகளும், மக்கள் தொகையும் இரு மடங்காக உயர்ந்துள்ளன.

Advertisement

நகரில் சொந்த வீடு உள்ள மக்கள் 50 சதம் பேர் கூட இருக்க வாய்ப்பில்லை. வேலைக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பல குடும்பத்தினர் 10, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே இருக்கின்றனர். இதனால், தங்களது பெற்றோரின் சொந்த ஊர் எது என்பதுகூட பல குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சொந்த வீடு இல்லை என்பதைத் தவிர குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வாடகை வீட்டில் குடியிருப்போர் பெற்றுள்ளனர்.

கருர் நகரில் ஒரே வளாகத்தில் 4 முதல் 10 வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுகின்றனர். இவற்றில் குடியிருப்போர், வீட்டு உரிமையாளர்களின் பல கட்டுப்பாடுகளைச் சகித்துக் கொண்டுதான் உள்ளனர்.

தற்போது சில மாதங்களாக வீட்டு உரிமையாளர்கள் சிலரின் இரக்கமற்ற செயலால், குடியிருப்போர் கடும் மன உளைச்சலைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குடியிருப்போரின் குடும்ப உறுப்பினர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் இறந்தால், அவரின் உடலை வீட்டிற்கு கொண்டு வரக் கூடாது என்றும், உடல் நலம் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ளவர்களை, அவர்களது சொந்த ஊருக்கே கொண்டு செல்லுமாறும் வீட்டு உரிமையாளர்கள் கூறுகின்றனராம்.

கடந்த 3 மாதங்களில் கரூர் நகரில் இதுபோன்ற 3 நிகழ்வுகள் நடந்துள்ளன. கடந்த மாதம் தாந்தோன்றிமலையில் உள்ள 4 குடியிருப்புகள் உள்ள வளாகத்தில் வாடகைக்கு குடியிருந்தவர் வீட்டில் இருந்த ஒருவர், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கரூரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார்.

அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்தபோது, வீட்டின் பூட்டுக்கு மேல் மற்றொரு பூட்டைப் போட்டு பூட்டி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர், சடலத்தை வீட்டிற்குள் கொண்டு வரக் கூடாது எனக் கூறிவிட்டார்.

இதனால், இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்று மயான நுழைவு வாயிலில் வைத்து, உறவினர்கள் வரும் வரை அங்கேயே காத்திருந்து, இறுதிச் சடங்குகளை செய்து, அடக்கம் செய்தனர். இதுபோன்ற பல நிகழ்வுகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

குடியிருக்கும் வீட்டை விட்டால், வேறு வீடு உடனடியாகக் கிடைக்காது என்பதால், குடியிருப்போர் இத்தகைய மனிதாபிமானமற்ற நிகழ்வுகளையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் மேலை. பழநியப்பன் கூறியது:

வீட்டு உரிமையாளர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும்போது, இது அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி, சில ஆண்டுகளில் வாடகைக்கு குடியிருப்போர் அனைவருமே கடுமையாகப் பாதிப்படைய நேரிடும்.

இறந்தவர்கள் இறைவனிடம் சென்றுவிடுவர் என்று முன்னோர் கூறுகின்றனர். இந்த நவீன காலத்தில் இறந்தவர்களின் உடலை வீட்டிற்குள் கொண்டு வரத் தடை விதிக்கும் வீட்டு உரிமையாளர்களின் மூடப்பழக்க மன நிலை மாற வேண்டும்.

சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இறந்தவர் உடலை கொண்டு வர அனுமதி மறுக்கப்படுவதாகவும், சில இடங்களில் அனுமதி அளித்தாலும் ஒரு மணி நேரம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனராம்.

இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்காக, சென்னையில் இறுதிச் சடங்குகளைச் செய்ய ஒரு சமுதாய அமைப்பு சார்பில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

கிராமப் பின்னணி கொண்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் கரூர் போன்ற நகரங்களில் இதேபோன்ற மண்டபங்களைக் கட்ட வேண்டிய நிலையை உருவாக்குவது வேதனைக்குரியது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.