வறட்சிக் காலத்தில் தேங்காய் உற்பத்தி கணக்கெடுப்பு
ஆலங்குடி, செப். 4: வறட்சி நிலவும் காலத்தில் தென்னை மரங்களில் உள்ள தேங்காய்களை கணக்கெடுக்கும் அலுவலர்களின் செயலால், நீண்ட நாட்களாக தாங்கள் கேட்டுவந்த கொப்பரை கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா என்ற அச்சம்
ஆலங்குடி, செப். 4: வறட்சி நிலவும் காலத்தில் தென்னை மரங்களில் உள்ள தேங்காய்களை கணக்கெடுக்கும் அலுவலர்களின் செயலால், நீண்ட நாட்களாக தாங்கள் கேட்டுவந்த கொப்பரை கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
ஆற்றுப்பாசனம் குறைவான ஆலங்குடி வட்டத்தில் அதிக அளவிலான ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி நடைபெற்று வந்தன. இடுபொருள் விலை உயர்வு, விளை பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தென்னை மர வளப்பில் ஆர்வம் காட்டியதால், இம்மாவட்டத்தில் 15,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை வறட்சியைத் தாங்கி பலனளித்த இந்த மரங்கள், நிகழாண்டு நிலத்தடி நீர் குறைவு மற்றும் மின்தடையால் காய்ப்பு குறைந்ததோடு, பல ஆயிரம் தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டன.
மேலும், தேங்காய் உற்பத்தி செலவைவிட விற்பனை விலை குறைவாக இருப்பதால், உரித்த தேங்காய்கள் மற்றும் கொப்பரைகளை அரசே நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து விவசாய சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி பகுதி தென்னை விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விவசாயிகள் ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு, அலைந்து ஆவணங்களை சேகரித்து விண்ணப்பத்தோடு இணைத்துக் கொடுத்தனர்.
ஆனால் அடையாள அட்டை ஏனோ வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு தென்னை விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து, இம்முறையும் ஆவணங்களோடு விண்ணப்பம் அளித்து பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடினர்.
இந்நிலையில், ஆலங்குடி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர், வேளாண் விரிவாக்க அலுவலர், கூட்டுறவு சங்க அலுவலர், தென்னை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த விவசாயிகளின் தென்னந் தோப்புகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இக்குழு, மரத்தில் உள்ள தேங்காய்களை எண்ணுகிறோம் என்ற பெயரில் தென்னங் குலைகளை மரத்திலிருந்து வெட்டி இறக்கி எண்ணி வருகின்றது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
""தேங்காய் உற்பத்தி போதிய அளவில் உள்ளது என்று முன்பே மதிப்பிடப்பட்ட இப்பகுதியில், மரத்தில் உள்ள தேங்காயை எண்ணுவது நகைப்பாக உள்ளது. வாடும் மரங்களை காப்பாற்றவோ, விளைச்சலை அதிகரிக்கவோ ஆலோசனை வழங்க வராத அலுவலர்கள், வறட்சியால் காய்ப்புக் குறைந்துள்ள நேரத்தில் தென்னங்குலைகளை வெட்டி அதில் எத்தனை தேங்காய் இருக்கிறது என ஆய்வு மேற்கொள்வது விவசாயிகளை அவமதிக்கும் செயல்'' என்கிறார் கீரமங்கலம் விவசாயி தமிழ்க்குமரன்.
வறட்சியால் தென்னை மரங்கள் பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் கணக்கு எடுப்பது என்ற பெயரில் தேங்காய்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டி, கொப்பரை கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு எதிரான அலுவலர்களின் செயலாகவே இதனை விவசாயிகள் கருதுகின்றனர்.
எனவே, தேங்காய் கணக்கெடுப்பு பணியை நிறுத்திவிட்டு, விவசாயிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.