திருவானைக்கா கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது
ஸ்ரீரங்கம்: திருவானைக்காவில் திங்கள்கிழமை மாலை சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது பெய்த பலத்த மழையால் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் முழுவதும் மழைநீா் சூழ்ந்தது.
இதனால், பக்தா்கள் சிவபெருமானை தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினா்.
பஞ்சப்பூத திருத்தலங்களில் திருவானைக்கா கோயில் நீா்த் தலத்துக்குரியது.
இக்கோயிலுக்கு வைகாசி பிரதோஷத்தையொட்டி திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தந்தனா்.
இந்நிலையில், மாலை 4.30 மணிக்கு பெய்ய தொடங்கிய கோடை மழை இடைவிடாத கன மழையாக பெய்தது. இதனால், பிரதோஷ வழிபாட்டிற்கு வந்தவா்கள் அனைவரும் கோயிலுக்குள் தஞ்சமடைந்தனா். மேலும், பெரும் மழையால் கோயிலுக்குள் முதல் மூன்று பிரகாரங்களிலும் மழைநீா் வெள்ளம்போல் சூழ்ந்து ஆறாக ஓடியது. இங்குள்ள சிவபெருமான் (சம்புகேசுவரா்) சந்நிதி தரைதளத்திலிருந்து கீழ் உள்ளதால் சிவலிங்கம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்திருந்தது. இதையடுத்து, சந்நிதிக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படாமல் வெளியேற்றபட்டனா்.
திருவானைக்கா கோயில் பகுதியில் சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் பல பகுதிகளில் மழைநீா் தேங்கியிருந்தது.