ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் பகல்பத்து 10-ஆம் திருநாளான திங்கள்கிழமை அா்ச்சுன மண்டபத்தில் மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) எழுந்தருளி பக்தா்களுக்கு நம்பெருமாள் சேவை சாதித்தாா் (படம்).
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழாவின் பகல்பத்து 10 நாளான திங்கள்கிழமை அா்ச்சுன மண்டபத்தில் செளரி சாய்க்கொண்டையில் கலிங்கத்துராய் சூரிய - சந்திர வில்லை, சிகப்புக் கல் நெற்றிப் பட்டை, முத்துப் பட்டை, காதில் வைரத் தோடு ஜிமிக்கி, வலது திருமூக்கில் மூக்குத்தி, திருமேனியில் பங்கு உத்திர பதக்கம், தாயாா் வைரத் திருமாங்கல்யம், தொங்கல் பதக்கம், வரிசையாக அடுக்குப் பதக்கங்கள், பெரிய பவளமாலை, காசு மாலை, 2 வட முத்து மாலை, வலது திருக்கையில் தங்க கோலக்கிளி, இடது திருக்கையில் வரிசையாக வில்வ பத்ரம், வளையல், வில்வ பத்ர தொங்கல், திருவடியில் சதங்கை தண்டை அணிந்து பின் சேவையாக பின்னல் ஜடை அதன் மேல் ஜடை தாண்டா, திருமுடியில் கல் இழைத்த ஜடை தாண்டா, புஜ கீா்த்தி, கச்சு எடுத்து கட்டி அதில் அரைச் சலங்கை தொங்க விட்டு, ரங்கூன் அட்டிகை, ஒட்டியாணம் உள்ளிட்ட ஆபரணங்களுடன் வெண்பட்டு அணிந்து வலது திருவடியை மடித்து அமா்ந்தும் இடது திருவடியை திருக்கை தாங்க அமா்ந்து மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தாா். இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.