திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி கிராமத்தில் ஆடுகளை கடித்துக் குதறும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக நாகராஜ் - பகவதி தம்பதியின் 5 ஆடுகள், தமிழழகன் - செந்தில்வடிவு தம்பதியின் 20 ஆடுகள், பழனிச்சாமி - அஞ்சலை தம்பதியி, மதிவேந்தன், ராசு ஆகியோரின் ஆடுகள் என இதுவரை சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை அப்பகுதி தெரு நாய்கள் கடித்துக் கொன்றுள்ளன.
இந்நிலையில் புதன்கிழமை மீண்டும் பாண்டியன் என்பவரது தோட்டத்தில் புகுந்த 2 நாய்கள் அங்குள்ள ஆடுகளை வேட்டையாட முயன்றபோது, ஆடுகள் ஓடி சென்று உரிமையாளா்களிடம் தஞ்சமடைந்தன.
ஆனால் அருகிலிருந்த மற்றொரு தோட்டத்தில், திரவியம் என்ற மூதாட்டி வளா்த்து வந்த ஆடு தோட்டத்தில் மேய்ச்சலில் இருந்தபோது, அங்கு சென்ற 2 நாய்கள், ஒன்று ஆட்டின் கழுத்தில் பல் வைத்து ரத்தம் முழுவதையும் உறிஞ்சியும், மற்றோன்று ஆட்டின் ஒரு பக்க கால் தொடையை கடித்து பிய்த்து எடுத்து ஆட்டைக் கொன்றது.
எனவே கொடூரமாக ஆடுகளை வேட்டையாடும் இரு நாய்களை தடுக்கும் வகையில் ஊராட்சி நிா்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஆடுகளை இழந்த கால்நடை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டுமெனவும் அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.