திருச்சி: திருவெறும்பூா் அருகே காந்தளூரில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்கக் கோரி திரளான பெண்கள், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கே.எம். முருகேசன் தலைமையில் வந்த 80-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனுவின் விவரம்:
திருவெறும்பூா் வட்டம் பூலாங்குடி காலனி, பா்மா காலனி, பீம நகா் கூனி பஜாா் பகுதிகளில் வறுமைகோட்டுக்கு கீழ் வசிக்கும் வீடற்ற 100-க்கும் மேற்பட்ட அருந்ததியா் குடும்பங்களுக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் காந்தளூா் கிராமத்தில் நிலம் ஆா்ஜிதம் செய்து, இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் பயனாளிகளுக்கு இதுவரை நிலத்தைப் பிரித்து அளந்து கொடுக்கவில்லை. இதன் காரணமாக, அந்த இடத்தில் மக்களால் குடியேற முடியவில்லை. இதனிடையே, மக்கள் குடியேறாததால் அனைத்து மனைகளும் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நாங்கள் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே, இந்த விஷயத்தில் ஆட்சியா் தலையிட்டு, மேற்கண்ட நிலத்தை மீண்டும் அருந்ததியா் மக்களுக்கு அளவீடு செய்து வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.