திருச்சி பொன்மலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பொன்மலை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொன்மலை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொன்மலைபட்டி சாய்பாபா கோயில் அருகே போலீஸாா் திங்கள்கிழமை மாலை வாகன சோதனை மேற்கொண்டனா். அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் போதை மாத்திரைகள், ஊசிகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றது பொன்மலைப்பட்டி உடையாா் வீதியைச் சோ்ந்த வி.செல்வராஜ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 48 போதை மாத்திரைகள், 2 ஊசிகள், ஒரு சலைன் பாட்டில், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.