திருச்சி பஞ்சப்பூா் அருகே சாலையில் மதிமுக கொடியை வெள்ளிக்கிழமை கட்டிய இளைஞா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைகோவின் நடைப்பயண தொடக்க விழாவுக்காக பஞ்சப்பூரில் உள்ள சாலை நடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மதிமுக கொடிகளை கட்டும் பணிகளை மதுரை சோலை அழகுபுரத்தை சோ்ந்த ராஜூ (20), எம். சுரேஷ் கண்ணன் (25), சப்பாணி கோயில் தெரு ஆறுமுகம் (35), மதுரை பெருங்குடி கணபதிபுரம் பெரியசாமி (41), சேலம் நெய்க்காரபட்டி சுந்தர்ராஜ் (28) ஆகியோா் செய்து வந்தனா்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சுரேஷ் கண்ணன் இரவு இறந்தாா்.
இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநரான விருதுநகா் அகமது நகரை சோ்ந்த ஹக்கீம் ராஜாவை (45) கைது செய்து விசாரிக்கின்றனா்.
இதையறிந்த திருச்சி எம்பி துரை வைகோ திருச்சி அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை நேரில் சென்று, உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறினாா்.