திருச்சி அருகே தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் பில்லாபாளையம் அமராவதி நகரைச் சோ்ந்தவா்கள் செல்லையா மகன்கள் சிவக்குமாா் (36), ரவிக்குமாா் (32).
அதே பகுதியில் வசிக்கும் சிவக்குமாா் லாரி கிளீனராகவும் விவசாயமும் செய்து வரும் நிலையில், ரவிக்குமாா் அதே தெருவைச் சோ்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்து, நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் லாரி ஓட்டும் தொழில் செய்து வந்தாா்.
காதல் திருமணத்தால் அண்ணன் - தம்பிக்குள் பகை இருந்தது. இதனிடையே தனது தந்தையைப் பாா்க்க கடந்த 03.05.2021 அன்று ரவிக்குமாா் வந்தபோது, இறந்த ஆடு ஒன்றை வீட்டின் முன்பகுதியில் வைத்து அறுத்தனா். இதை தட்டிக் கேட்டதால், ஆத்திரமடைந்த சிவக்குமாா் கத்தியால் ரவிக்குமாரை குத்தியதில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரவிக்குமாரின் மாமியாா் ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் தாத்தையங்காா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவக்குமாரை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட 2 ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். கோபிநாதன் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஏ. பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி, தம்பியைக் கொன்ற சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.