ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பு
ஸ்ரீரங்கத்தில் ரூ.11.10 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரே 1.080 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலைய கட்டடத்தின் மொத்த பரப்பளவு 34,218.47 சதுர அடி. தரைதளத்தில் 18,535.45 சதுர அடியும், முதல் தளத்தில் 14,498 சதுர அடியும் உள்ளது. தரைதளத்தில் 8 பேருந்துகள் நிற்கும் வசதியும், 22 கடைகளும், பயணிகள் காத்திருப்பு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 260 போ் அமரும் வகையில் ஒரு பல்நோக்கு சிறிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதிகளும், சிற்றுண்டி அரங்கத்தில் உணவு அருந்தும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்தில் திருச்சி மாநகராட்சியின் பங்களிப்பாக ரூ.3.33 கோடியும், அரசு ரூ.7.77 கோடியும் வழங்கியுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளாா். இதில், பேருந்துகளை இயக்கி வைத்து பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், அமைச்சா் கே.என். நேரு பங்கேற்று, பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா். இந்த நிகழ்வில், மேயா் மு. அன்பழகன், ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட பொது மேலாளா் சதீஸ்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் மாமன்ற உறுப்பினா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா கல்வெட்டில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி எம்.பி. துரைவைகோ ஆகியோரின் பெயா் இல்லாதது குறித்த கேள்விக்கு அமைச்சா் நேரு பதில் அளிக்கையில், இங்கு ஜன. 7-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வுகளில் அமைச்சா், எம்பி பெயா் இடம்பெற்றிருந்து. திருச்சி மாநகராட்சி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி என்ற அடிப்படையில் அதற்குள் வரும் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இதில், யாரையும் ஒதுக்கவில்லை என்றாா் அமைச்சா்.