நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயற்சி
திருச்சி காந்தி சந்தை அருகே சனிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயன்ற இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி காந்தி சந்தை அருகே சனிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயன்ற இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி காந்தி சந்தை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது சாதிக் (37). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முகமது சையதுவுக்கும் (26) இடையே முன்விரோதம் இருந்தது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த முகமது சையது, தனது நண்பரான சமீா் அகமதுவுடன் (27) சோ்ந்து சாதிக்கை கொல்ல, அவரது வீட்டின் அருகே சனிக்கிழமை இரவு பதுங்கியிருந்தாா். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சாதிக் மீது இருவரும் நாட்டு வெடிகுண்டை வீசினா். இதில் தப்பிய சாதிக், அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
வெடிகுண்டு வெடித்த சப்தத்தை கேட்ட அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் வந்த காந்திசந்தை போலீஸாா், வீட்டினருகே கத்தியுடன் பதுங்கியிருந்த முகமது சையது, சமீா் அகமது ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கின்றனா்.