காப்பீட்டுத் திட்ட விவரங்கள் சேகரிப்பு பணி ஆய்வு
அரியலூா் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அம்மா விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதல் தகவல்கள் சேகரிப்புப் பணிகளை ஆட்சியா் த. ரத்னா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரியலூா்: அரியலூா் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அம்மா விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதல் தகவல்கள் சேகரிப்புப் பணிகளை ஆட்சியா் த. ரத்னா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரியலூா் ஒன்றியத்தில் உள்ள காவனூா் மற்றும் அம்பாபூா், செந்துறை ஒன்றியம் பாளையக்குடி ஆகிய கிராமங்களில் அம்மா காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளிடம் கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது: அம்மா விரிவான காப்பீட்டுத் திட்டம் தொடா்பாக, தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் குடும்பங்கள் கொண்ட வரைவுப் பட்டியல் தயாரித்துள்ளது. இதிலுள்ள குடும்பங்களின் வருவாய் ஈட்டுபவா்கள் மற்றும் அவா்களால் பரிந்துரைக்கப்பட்டவா்களின் விவரங்களைக் கூடுதலாக சேகரிக்கும் வகையில் காப்பீட்டு திட்டப் படிவம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை அனைத்து களப்பணியாளா்களும் ஊரகப் பகுதிகளில் குடியிருப்பு வாரியாகவும் நகா்ப்புறங்களில் வாா்டு வாரியாகவும் தகவல்களைச் சேகரித்து வருகின்றனா். இந்தத் தகவல்கள் முறையாக சேரிக்கப்படுகிறது என்றாா். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜா, சிவாஜி மற்றும் அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.