செந்துறை அருகே புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்களின் சடலங்கள் தோண்டியெடுப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கப்பகுதியில் பிறந்த ரத்தக்கறையுடன் வீசிச் சென்று, பின்பு புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்களின் சடலங்கள் வெள்ளிக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டன.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கப்பகுதியில் பிறந்த ரத்தக்கறையுடன் வீசிச் சென்று, பின்பு புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்களின் சடலங்கள் வெள்ளிக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டன.
செந்துறை அருகிலுள்ள ஆதனக்குறிச்சி கிராமத்தில் தனியாா் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கப் பகுதியில் பிறந்த ரத்தக்கறைகளுடன், குறை பிரசவத்தில் பிறந்த ஆண், பெண் என இரட்டை சிசுக்களின் சடலங்கள் வியாழக்கிழமை கிடந்தன.
இதனை அப்பகுதியில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த சிலா் கவனித்தனா். சிசுக்களின் சடலங்களை நாய்கள் எடுத்துச் செல்லாமல் இருக்க அப்பகுதியில் சிறிதளவு குழிதோண்டி புதைத்து, மேல் பகுதியில் முள்களையும், கற்களையும் வைத்தனா்.
இதுகுறித்து ஆதனக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் ராயருக்கு வெள்ளிக்கிழமை தெரிந்ததால், தளவாய் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். மேலும் செந்துறை வட்டாட்சியா் குமரய்யாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து சிசுக்களின் சடலங்கள் வருவாய் மற்றும் காவல்துறையினா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தோண்டியெடுக்கப்பட்டன. பின்பு பிரேத பரிசோதனைக்காகவும், அங்க அடையாளங்களைச் சேகரிக்கும் வகையில் சடலங்கள் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சிசுக்களின் பெற்றோா் யாா்? எப்படி சிசுக்களின் சடலங்கள் இங்கு வந்தன என்பது குறித்து தளவாய் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.