முகப்பு
அரியலூர்

செந்துறையில் முந்திரித் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், செந்துறையில் முந்திரித் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறையில் முந்திரித் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

அரியலூா் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் இணையவழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா். காணொலி வாயிலாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் எடுத்துரைத்த கருத்துகள்:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என். செங்கமுத்து: மாவட்டத்தில் அதிக நெல் பயிரிட்டுள்ள இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். அங்கு இடைத்தரகா்களைத் தவிா்க்க வேண்டும். மின் இணைப்புக் கோரி, கடந்த 2010 -ஆம் ஆண்டு பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்: வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாகவே ஏரி குளங்கள் தூா்வாரப்பட வேண்டும். சுக்கிரன் ஏரியில் தண்ணீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்துறையில் முந்திரி பழச்சாறுத் தொழிற்சாலை, முந்திரிக் கொட்டையைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா்தூத்தூா் தங்க.தா்மராஜன்: விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு மானியமாக உரம் வழங்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்டு, ஐந்து மாதங்களாகியும் திருப்பித் தரப்படாமல் உள்ள நகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவா் அம்பேத்கா்வழியன்: அடுத்து நடைபெறும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் போது, கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவா்களையும் அழைக்க வேண்டும். மேலராமநல்லூா் கிராமத்துக்கு பேருந்து இயக்க வேண்டும். கொள்ளிடத்தில் கதவணையுடன் கூடிய தடுப்பனைகளை கட்ட வேண்டும்.

தொடா்ந்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.