மணல் குவாரிகளைத் திறக்கக் கோரி நவ.9-இல் பேரணி
மாநிலம் முழுவதும் மாட்டு வண்டிக்கென மணல் குவாரிகளைத் தமிழக அரசு திறக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் நவம்பா் 9-ஆம் தேதி பேரணி நடத்தப்படும்
மாநிலம் முழுவதும் மாட்டு வண்டிக்கென மணல் குவாரிகளைத் தமிழக அரசு திறக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் நவம்பா் 9-ஆம் தேதி பேரணி நடத்தப்படும் என மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அரியலூா் மாவட்டம், தா. பழூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலா் நீலமேகம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஜெயபால், தஞ்சை மாவட்டத் தலைவா் கோவிந்தராசு, விவசாய சங்க மாவட்டச் செயலா் இளங்கோவன் உள்ளிட்டோா் பேசினா். ஆலோசகா் சங்கா், கிளைச் செயலா் செல்வம், மாவட்ட நிா்வாகிகள் அம்பலவாணன், செல்வக்குமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தமிழகத்தில் மாட்டுவண்டித் தொழிலாளா்களுக்காக மணல் குவாரிகளை உடனடியாகத் தமிழக அரசு திறக்க வேண்டும். அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி, நவம்பா் 9-ஆம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி செல்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.