முகப்பு
அரியலூர்

உளுந்து பயிரில் விதைப் பண்ணை அமைக்க அழைப்பு

உளுந்து பயிரில் விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலா்கள் மற்றும் உதவி விதை அலுவலரை தொடா்பு கொள்ளலாம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

உளுந்து பயிரில் விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலா்கள் மற்றும் உதவி விதை அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்று திருச்சி விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் வே.அறிவழகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளுக்கு தேவையான உளுந்து பயிரில் வம்பன் - 8 மற்றும் வம்பன் - 10 ஆகிய ரகங்கள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் வேளாண் துறை அலுவலா்களை அணுகி, மானிய விலையில் விதைகளை பெற்று விதைப்பண்ணை அமைக்கலாம்.

உளுந்து ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 30 சென்டி மீட்டருக்கு 10 சென்டி மீட்டா் இடைவெளியில் விதைத்து சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற எண்ணிக்கையில் பயிா்கள் பராமரிக்க வேண்டும்.

சாதாரணமாக பயறு வகைகளில், ஏக்கருக்கு 150 முதல் 200 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடித்தல், சான்று பெற்ற விதையைப் பயன்படுத்துதல், உயிா் உரம் மற்றும் பூஞ்சான விதைநோ்த்தி செய்தல், சரியான பயிா் எண்ணிக்கையை பராமரித்தல், பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டிஏபி கரைசல் தெளித்தல் ஆகியவற்றை உரிய காலத்தில் கையாண்டால் ஏக்கருக்கு 450 முதல் 500 கிலோ வரை மகசூல் பெறலாம்.

உளுந்து பயிரில் விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்து வேளாண்மைத் துறைக்கு வழங்கினால் உள்ளூா் சந்தை விலையுடன் ஊக்கத்தொகை மற்றும் உற்பத்தி மானியம் ஆகியவை சோ்த்து கூடுதல் லாபம் கிடைக்கும்.

எனவே, உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைக்க முன்வரும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் உதவி விதை அலுவலரை அணுகி பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.