அரியலூா் மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை இடைவிடாமல் பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை இடைவிடாமல் பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் சில நாள்களாக பெய்து வந்த மழை கடந்த வாரம் நின்றது. இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால் புதன்கிழமை முற்பகல் 11 மணி முதல் இடைவிடாமல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பிற்பகலுக்கு பின் மிதமான மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிா் வானிலை நிலவியது. சாரல் மழையால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.
அரியலூா் புதுமாா்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்தி சந்தை, வெள்ளாளத் தெரு, பெரம்பலூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது.
மாவட்டத்தில் பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து, பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது. பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றன.
திருமானூா், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் வயல்களில் களையெடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தொழிலாளா்கள் மழைஅங்கி அணிந்துகொண்டு பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.