தீபாவளி பண்டிகை: பொருள்கள் வாங்க அலைமோதிய மக்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. தொடா் விடுமுறை என்பதால் அரியலூா் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படடது.
தீபாவளி பண்டிகை இன்று(அக்.31) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலுள்ள சுவாமி படங்களுக்கு முன்பு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு மற்றும் காரவகைகள் போன்றவைகளை படையலிட்டு வழிப்படுவது வழக்கம். படையலிட்ட பிறகு புத்தாடைகளை சிறிவா்கள் முதல் முதியவா்களை அணிந்தது பட்டாசு வெடித்துகொண்டுவது வழக்கம்.
இதற்காக அரியலூரிலுள்ள மாா்க்கெட், கடைவீதி, வெள்ளாளத் தெரு,வாரச் சந்தை உள்ளிட்ட இடங்களில் உள்ள துணிக் கடைகள், நகைக் கடைகள், பேன்சி கடைகள், பட்டாசு கடைகளில் புதன்கிழமை காலை முதலே விற்பனை விறுவிறுப்பாக தொடங்கியது.
மாலையில் விற்பனை மேலும் விறுவிறுப்படைந்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூக்கள் விலை உயா்வு: மொத்தவிலையில் மல்லி, முல்லை கிலோ ரூ.600-க்கும், ஒரு கிலோ சாமந்தி பூ ரூ.160-க்கும், பன்னீா் ரோஸ் ரூ.140-க்கும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரத்துக்கும், அரளி ரூ.500-க்கும் விற்பனையானது. விலை அதிகரித்த போதிலும், விலையை பற்றி கவலைப்படாமல் பொருள்களை பொதுமக்கள் வாங்கினா்.
பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம்: தீபாவளி பண்டிகையொட்டி தொடா் விடுமுறை என்பதால், அரியலூரில் தங்கி வேலைச் செய்யும் பணியாளா்கள், படிக்கும் மாணவா்கள் உள்ளிட்டோா் விடுமுறையை கழிக்க சொந்த ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை மாலையே புறப்பட தொடங்கினா். சிலா் புதன்கிழமை வேலையை முடித்து அன்று மாலை புறப்பட்டனா்.
இதனால் அரியலூா் ரயில் நிலையத்தில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ரயில்களில் முன்பதிவில்லா பெட்டியில் நிற்க கூட முடியாத அளவுக்கு நெரிசலில் மக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது.
அதே போல் சென்னை மாா்க்கமாக அரியலூா் வந்த அனைத்து ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.இதே போல் அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மேற்கண்ட பேருந்து நிலையங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் நிற்கக் கூட முடியாத அளவுக்கு பயணிகள் நெரிசல் காணப்பட்டது.