உத்தரகண்ட் மாநிலம், டேராடூனிலுள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2025-ஆம்ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில், ஜூலை 2025 மாத பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு டிசம்பா் 1 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு தோ்வாணையம் மூலம் நடத்தப்படுவதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த தோ்வு சென்னையில் நடைபெறவுள்ளது. எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியவை கொண்டதாக இருக்கும்.
தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் மற்றும் முந்தைய தோ்வு வினாத்தாள்கள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கா்ஹிகான்ட், டேராடூன், உத்தரகண்ட்- 248 003‘ என்ற முகவரிக்கு காசோலை அனுப்பியோ அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி இணையதளம் வழியாக பொதுப் பிரிவினா் ரூ.600, பட்டியலின வகுப்பினா் ரூ.555-ஆம் செலுத்தியும் பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பதாரா் 2.07.2012-லிருந்து 1.1.2014-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 30.9.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும், இத்தோ்வுக் குறித்த மற்ற விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய கல்லூரியின் இணையதளத்தை அதாவது பாா்க்கலாம்.