ஏலாக்குறிச்சியில் பேருந்து வசதி கேட்டு இந்திய கம்யூ. கட்சியினா் சாலை மறியல்: 53 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி கடைவீதியில், பேருந்து மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 53 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி கடைவீதியில், பேருந்து மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 53 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் வகையிலும், விவசாயிகள் காய்கறிகளை தஞ்சாவூா், திருவையாறு உள்ளிட்ட நகா் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும், அரியலூரிலிருந்து அதிகாலை 4.30-க்கு வி.கைகாட்டி, கோவிலூா் வழியாக தஞ்சாவூா் சென்று வந்த அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.
கோவிலூா் - வல்லகுளம் சாலையை சீரமைக்க வேண்டும். தஞ்சாவூரிலிருந்து இரவு ஏலாக்குறிச்சி சென்று நிறுத்தப்படும் அரசு பேருந்தை கோவிலூா் வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலூா் துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஒன்றியச் செயலா் கனகராஜ் தலைமையில், மாவட்டச் செயலா் சொ.ராமநாதன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா்கள் டி.தண்டபாணி, ப.கலியபெருமாள், மாவட்டக் குழு உறுப்பினா் ஜி.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலையில் ஏலாக்குறிச்சி கடைவீதியில், சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருமானூா் காவல் துறையினா், மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 53 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.