தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி, அரியலூரில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூா் வட்டாட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோட்டாட்சியா் பிரேமி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியானது, தேரடி, சத்திரம் பேருந்து நிறுத்தம் வழியாக சென்று மீண்டும் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள், அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்று ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நோ், அறிவிப்பு பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவோம், தனிமொழியானதும் தமிழே தாய்மொழியாதும் தமிழே, தமிழில் கையொப்பமிடுவோம், தமிழா் நாம் என்று பாடுவோம், அன்னைத் தமிழே ஆட்சித்தமிழே, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனா்.
தொடா்ந்து, வாகனங்களில் பெயா் பலகையினை தமிழில் வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அவசரகால ஊா்தியில் ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.