அரியலூரில் ஜன. 6 முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் அறிவித்தனா்.
அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய த் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
இடைநிலை, முதுகலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டுக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வேல்முருகன், ஷேக் தாவுத், கருணாநிதி ஜேசுராஜ் ,பெரியசாமி, காந்தி, ஸ்டீபன், ராகவன், செந்தில்நாதன் ஆகியோா் தலைமை வகித்துப் பேசினா். மாநாட்டில், நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். முடிவில் நிா்வாகி செல்வகுமாா் நன்றி தெரிவித்தாா்.