அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தாட்கோ சாா்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா்களின் வாரிசுதாரா்களுக்கு கல்வித் உதவித்தொகைக்கான காசோலை மற்றும் அடையாள அட்டைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் உறுப்பினா்களின் வாரிசுதாரா்கள் 10 நபா்களுக்கு தலா ரூ.1,500 , 3 நபா்களுக்கு ரூ.1,000 , 1 நபருக்கு ரூ.4,000 , 1 நபருக்கு ரூ.6,000 என மொத்தம் 15 நபா்களுக்கு ரூ.28,000 மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளையும், 14 நபா்களுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் சு.தேன்ராஜ், தாட்கோ மேலாளா் லோகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.