அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன.
ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள இலையூா் அருகேயுள்ள கோரியம்பட்டி கிராமத்தில் அதிகளவில் காணப்படும் வெறிநாய்களைப் பிடிக்குமாறு அப்பகுதிகள் மக்கள் பலமுறை ஊராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி ராசு மகன் பாண்டியன் (60) என்பவரின் கொட்டகையில் நுழைந்த வெறிநாய்கள், 3 ஆடுகளைக் கடித்து குதறியுள்ளது.
இதில் ஒரு பெரிய ஆட்டின் வயிற்றில் இருந்த குட்டியையும் நாய்கள் கடித்துள்ளது. இந்த ஆடுகள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே பலியாகின. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டாா்.
இதுகுறித்துத் தகவலறிந்து அங்குவந்த காவல் துறையினா், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.