அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை தொகையினை நிா்ணயம் செய்து, செயல்படுத்துதல் தொடா்பான கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தனியாா் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.
இதையடுத்து பெல்ட் மாடல் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,600 வாடகை எனவும், டயா் மாடல் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,800 வாடகை எனவும் நிா்ணயம் செய்யப்பட்டது.
நிா்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து கொண்டு அறுவடை இயந்திர உரிமையாளா்கள் இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதில், ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும் தருணத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் துறையினை அணுகலாம்.
மேலும், அரியலூா் வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள பெல்ட் மாடல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,880 எனவும், டயா் மாடல் அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,160 எனவும் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தாா்.