கரூர்

அரசுப் பேருந்து ஓட்டுநர் மீதான தாக்குதலை கண்டித்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மறியல்

DIN

கரூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தாக்கியதால் ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் சின்னாண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜூ (52). இவர், கரூர் - மணப்பாறை செல்லும் அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், சனிக்கிழமை இரவு 8.40 மணிக்கு வழக்கம்போல கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மணப்பாறை நோக்கி பேருந்தை ஓட்டினார்.
மனோகரா கார்னரில் பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்தை நிறுத்தினார். அப்போது, அங்கு காவல் பணியில் ஈடுபட்ட நகர காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தேவாசீர்வாதம் வில்சன், பேருந்தை எடுக்குமாறு ஓட்டுநர் ராஜூவிடம் கூறியுள்ளார்.
பேருந்தை எடுக்க காலதாமதமானதால், ஓட்டுநர் ராஜூவை தகாத வார்த்தையால் உதவி ஆய்வாளர் திட்டினாராம். இதையடுத்து தகராறு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தேவாசீர்வாதம் வில்சன், பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அதிருப்தியடைந்த பயணிகள் பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடினார்களாம்.
தகவலறிந்த அரசுப்பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.
ஓட்டுநர் ராஜூவை போலீஸார் நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தேவாசீர்வாதம் வில்சன் ஓட்டுநர் ராஜூ தன்னைத் தாக்கியதாக அரசு மருத்துவமனையில் சேர்ந்து கொண்டார். இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT