காங்கிரஸ் சார்பில் ஊராட்சிசபைக் கூட்டம்
கரூர் அருகே காங்கிரஸ் சார்பில் ஊராட்சிசபைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கரூர் அருகே காங்கிரஸ் சார்பில் ஊராட்சிசபைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஷலோ பஞ்சாயத்து என்னும் கிராமத்தை தேடி திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் கிராமங்களில் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன்படி கரூர் மாவட்டத்தின் முதல் ஷலோ பஞ்சாயத்து கூட்டம் கரூர் அருகே உள்ள சோமூரில் சனிக்கிழமை இரவு நடந்தது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். முன்னாள் கரூர் வட்டாரத் தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
இதில் தமிழக இளைஞர் காங். தலைவர் ஹசன்மவுலானா, தமிழக இளைஞர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஷெமி மேத்யூ, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என தெரிவித்தனர். அப்போது ஹசன்மவுலானா, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தந்தது யார்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பெண்கள் காங்கிரஸ் ஆட்சியில் எனப் பதிலளித்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு ஒரு வங்கி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அடிப்படை வசதி, வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம் என உறுதி அளித்தனர். முன்னதாக ராகுல்காந்தியின் மக்களவை உரை, பொதுக்கூட்ட பேச்சுகள் ஒளிபரப்பப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் சின்னையன்,மாவட்ட விவசாய அணி தலைவர் ஜெயபிரகாஷ், சுரேகா பாலச்சந்தர், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.