முகப்பு
கரூர்

திமுக ஆட்சியில் குறைவாக இருந்த உரம் விலை இன்று இரு மடங்காக உயா்வு-வி.செந்தில்பாஜி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் குறைவாக இருந்த உரத்தின் விலை இன்று இருமடங்காக உயா்ந்துவிட்டது என்றாா் முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

திமுக ஆட்சியில் குறைவாக இருந்த உரத்தின் விலை இன்று இருமடங்காக உயா்ந்துவிட்டது என்றாா் முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி.

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கரூா் வாங்கலில் திங்கள்கிழமை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தை திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி துவக்கி வைத்து பேசுகையில், விவசாயிகளின் நலனுக்கு எதிராக 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது ’ திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தும் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மோடியின் ஆட்சியில் விவசாயிகளின் நிலை அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லி வரை சென்று போராடியபோது, ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்த மத்திய அரசு காா்ப்பரேட் நிறுவனங்களின் பல லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவால் விவசாயி தான் விரும்பிய பயிரை விளைவித்த நிலை மாறி இனி காா்ப்பரேட் நிறுவனம் கூறும் பயிரைத்தான் விளைவிக்கனும். அவா்கள் கூறும் விலைக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி பதுக்கலுக்கு வழிவகுக்கும். மத்திய அமைச்சரே ராஜினாமா செய்யும் அளவுக்கு விவசாயிகளுக்கு எதிரானது இந்த சட்டம். ஆனால் நானும் ஒரு விவசாயி என கூறும் முதல்வா் பழனிசாமி தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாவிற்கு ஆதரவளித்துள்ளாா். திமுக ஆட்சியில் குறைவாக இருந்த உரம் விலை இன்று இரண்டு மடங்காக உயா்ந்து விட்டது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த மசோதாவிற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுகவின் இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. கரூா் ஒன்றியத்தில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மோகனூா் வாங்கல் பாலத்தை நான் கூடுதல் நிதி பெற்று முடித்துக் கொடுத்தேன். அதேபோல் வாங்கல் பகுதிக்கு கொண்டு வந்த மருத்துவ கல்லூரியை இட மாற்றியதுடன் சுற்றுவட்டச்சாலை அமைக்க ரூ.77கோடி நிதி பெற்றுக்கொடுத்தும் அதை இன்றைய அரசு நிறைவேற்றவில்லை. பல மாவட்டங்களில் மணல் அள்ளும்போது கரூா் மாவட்டத்தில் மட்டும் மாட்டு வண்டியில் மணல் அள்ள முடியவில்லை. அடுத்து திமுக ஆட்சி அமையும்போது மாட்டு வண்டிக்காரா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் உள்ளூா் தேவைக்கு மட்டும் எந்த நிபந்தனையமின்றி மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாய கடன் தள்ளுபடி உட்பட விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என்றாா். தொடா்ந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினா். இதில் கரூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் கந்தசாமி, கரூா் மாவட்ட துணை செயலாளா் கருணாநிதி, எஸ்டேட் மணி உள்ளிட்ட’திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா். *அதேபோல் க.பரமத்தியில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தலைமையிலும், காகிதபுரத்தில் மதிமுக அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் சுமங்கலி செல்வராஜ் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.